O God! Rise aloft the banner of the oneness of mankind.
O God! Establish the Most Great Peace.
Cement Thou, O God, the hearts together.
- Abdu’l-Baha
...............
நம் புராணகளிலாகட்டும், உபநிஷத்துகளிலாகட்டும், மற்றைய நூல்களிலாகட்டும் உயர்ந்த ஆத்ம ஞானத்தை கேள்வி-பதில் மூலமே விளக்கியுள்ளனர். சீடனானவன் ஆசானிடம் பணிவுடன் கேள்வி கேட்க, குருவோ மனமகிழ்ந்து பதிலுரைப்பார்.
Where there is demand, there is supply என்பதைப் போல கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறுவார். தானாக வலிய வந்து ‘இந்தா, இவையெல்லாம் எனக்கு தெரியும். நீயும் கற்றுக் கொள்,’ என்று சீடன்பால் திணிப்பதில்லை.
முதலில் சீடன் கேள்வி கேட்கும் அளவு உயரிய நிலையை அடைய வேண்டும். கிடைத்த பதிலை கிரஹித்துக் கொண்டு அதிலிருந்து மேலும் தெளிவு பெற மேலும் கேள்விகள் கேட்க வேண்டும். இதில் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். விவேகசூடாமணியில் மிக அழகாக ஆதிசங்கரகரர் இம்முறையை கையாண்டிருப்பார். ஆகவே கேள்விகள் மிக அவசியம். கேள்வி அறிவை விசாலமாக்கும். கேள்வி பதிலை செம்மைப்படுத்தும். கேள்வி இலக்கை அடையும் வரை அமைதியின்றி தவிக்கும்.
இருதரப்பு மக்கள் கேள்விகளை கேட்பதில்லை. ஒருவன் அஞ்ஞானி. மற்றொருவன் மெய்ஞானி. அஞ்ஞானிக்கோ ஒன்றும் தெரியாததனால் கேள்விகள் அவன் மூளையில் உதிப்பதில்லை. மெய்ஞானியோ, அனைத்தும் அறிந்தவர். கடவுளுக்கு சமமானவர். அவருக்கு அவசியமில்லை.
அதற்காக தேவையற்ற கேள்விகளை கேட்பவர், விடைகளைப் பற்றிய கவலையின்றி கேள்விகளை கேட்க வேண்டுமே என்று வீணே தவிப்பவர், கேள்விகளைக் கேட்டு பிறரை மடக்க வேண்டும் என்று இறுமாப்புடையவர், கேள்விக்கான விடை ஒன்றை முதலிலேயே மனதில் வரையறுத்துக் கொண்டு பிறகு கேள்விகளை கேட்பவர், கேள்விக் கேட்பவர் மட்டுமே புத்திசாலிகள் என்னும் தவறான எண்ணத்துடன் பிறர் அறிய கர்வத்துடன் இருப்பவர் – இவர்கள் அஞ்ஞானியை விட பரிதாபத்திற்குரியவர்கள்.
நானே பலமுறைப் பார்த்திருக்கிறேன். யார் குருமார்கள் வந்தாலும், யார் சொற்பொழிவாற்றினாலும் அவரை அணுகி கேள்விகள் கேட்பர் ஒரு சிலர். எனக்கோ ஒரு கேள்வியும் மனதில் எழவே எழாது. நான்தான் அஞ்ஞானியாயிற்றே. நல்லதாக போயிற்று.
ஞானி ஆக வேண்டுமெனில் வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடிக்க வேண்டிய அவசியமில்லை.
காந்திஜியைப் போல எடுத்த கொள்கை ஒன்றாக இருந்தாலும், அதை இறுதி வரை கடைபிடிக்கும் மனப்பக்குவமும், உறுதியும் வேண்டும். இது முதலும் கடைசியுமாய் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
உதாரணத்திற்கு இந்த கீதையை மனப்பாடம் செய்து என்ன பயன்? வேண்டுமானால் என் கட்டுரைகளிலோ சொற்பொழிவிலோ பிறரைக் கவரும் வண்ணம் அழகாக கீதையை மேற்கோள் காட்டலாம். அவற்றை பின்பற்றவில்லையெனில்....
நான் ரசித்துப் படித்த சுவாமி விவேகானந்தரின் வரிகள் இதோ.....
“Knowledge can only be got in one way, the way of experience; there is no other way to know.”
இதை எழுதும் பொழுது பல வருடங்களுக்கு முன் படித்த இந்நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது –
ஏழை பக்தர் ஒருவர் கோவில் வாசலில் அமர்ந்து பகவத் கீதையைப் பார்த்து பார்த்துக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த சைதன்ய மகாபிரபு அவரருகே சென்று ‘ஏன்’ என்று கனிவுடன் வினவ, அதற்கு பக்தர், ‘என்னால் மேலே பக்கத்தை புரட்ட கூட முடியவில்லை. கண்ணனோ பரமாத்மா. ஆனால் அவரோ அர்ச்சுனனின் ஆணைக்கு அடிபணியும் தேரோட்டியாகி மாறி நிற்கின்றார் எவ்வித அகந்தையுமின்றி. இதைப் பார்த்து பார்த்து என் நெஞ்சம் உருகுகிறது,’ என்றாராம். அதற்கு சைதன்யர், கண்ணீருடன் பக்தரை ஆரத்தழுவிக் கொண்டு, ‘நீர் மேலே படிக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி கற்க வேண்டியது வேறொன்றுமில்லை,’ என்றாராம்.
இனி கேள்வி-பதிலுக்கு வருவோம்.
பார்த்தனுடன் தோளோடு தோள் சேர்த்து, கையோடு கைக்கோர்த்து நடக்கும் கண்ணன் இதற்கு முன் ஒரு முறை கூட தானாக சென்று ‘வா, நீ என் உயிர் தோழன். உனக்கு இதைக் கற்பிக்கிறேன்,’ என்று கூறியதில்லை. எதை எப்பொழுது கூற வேண்டுமோ அதை மட்டுமே அவர் கூறுகிறார். இதையாவது நம் வாழ்வில் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
அதே போல், ஒரு முறை கூட கண்ணன் பார்த்தனைப் பார்த்து, ‘உனக்கு இது கூட தெரியாதா, சுத்த மக்காக இருக்கிறாயே’ என்று எகத்தாளமாகவோ, ‘ஏன் இப்படி கேள்விக் கேட்டு உயிரை வாங்குகிறாய்,’ என்றோ கடிந்து கொள்வதில்லை. பொறுமையாக ஒவ்வொரு முறையும், ‘இவற்றை நன்கு மனதில் வாங்கிக் கொண்டாயா எனதருமை நண்பனே,’ என்றே கனிவுடன் கூறுகிறார்.
இப்படிப்பட்ட குருவே ஆத்ம ஞானத்தை தேடும் ஒருவனுக்கு அவசியம்.
கீதையில் பரமாத்மாவான கண்ணன் குருவாக நிற்க, பார்த்தன் சீடனாக மாறி பணிவுடன் ஆத்ம ஞானத்தைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறான்.
இதைப் படிக்கும் நான் சிறிது நேரத்திற்கு அர்ச்சுனனாக மாறி கண்ணனிடம் கேட்கிறேன்...
ஞானமென்று உரைத்தாய் என் அஞ்ஞானம் மறையவே
யோகமென்று உரைத்தாய் அன்றாட வாழ்வை நடத்தவே
உத்தமமென்று உரைப்பதை நன்றே தெளியவை உயரவே
பித்தான எனக்கு மேலும் புகட்டுவாய் அறிவையே
கண்ணன் சொன்னான் -
செய்யும் செயல்களைவிட சிறந்தது புத்தி யோகமே
பலன்களில் நாட்டமுடையோர் விரும்புவது போகமே
எனவே சரணடைவாய் புத்தியில் என்ற கூற்றை ஏற்குமுன்
ஏனென்று சிறிது கேட்பாய் என் நண்பனே
நன்மை தீமையை கண்டறியும் திறன்
புத்திக்கு உண்டென்பதை அறிவாயல்லவா
சமநோக்கு பார்வை புத்தியால் அடைவதால்
செயல்களின் நல்லவையும் தீயவையும் அழியுமல்லவா
திறம்பட செய்யப்படும் செயல்களே யோகமாகும்
புத்திசாலிகள் தீயவை களைவது இவ்வழியே ஆகும்
பலன்களில் நாட்டமின்றியே அவர்தம் செயல்களும் சிறக்கும்
பிறப்பின் சுழற்சியிலிருந்து விடுபடுவதும் உறுதியாகும்
புத்தியைக் கொண்டு மோகத்தை களைவதனால்
கேட்டு உணர்ந்ததுவும் இனி கேட்டு உணரப்படுவதும்
சுருதி குறைந்து சுயநினைவிழந்து விடுவதால்
நடுநிலை என்றும் கொள்வாய் என் நண்பனே
எப்பொழுது உன் புத்தி கேட்டு உணர்ந்தவைகளை
புறக்கணித்து அசைவற்று சலனமற்று இருக்கிறதோ
எப்பொழுது ஆன்மாவில் நிலைத்து இருக்கிறதோ
அப்பொழுது ஆத்ம ஞானத்தை உணர்வாய் தோழனே
நான் கேட்டேன் –
இறையருளில் திளைத்து ஒன்றான மனிதனை
ஸ்தித பிரஞையுடன் வாழும் மனிதனை
இவ்வுலகில் அடையாளம் காண்பது எங்ஙனம்
அவர் பேசுவதும் அமர்வதும் நடப்பதும் எங்ஙனம்
கண்ணன் சொன்னான் –
ஆசைகளை அறவே விட்டொழித்திருப்பார்
மனதை தம்வசம் வைத்திருப்பார்
ஆன்மாவில் ஒன்றியே மகிழ்ந்திருப்பார்
சமநிலையடைந்த மனிதன் அவரேயாவார்
யாருடைய மனம் எந்நிலையிலும் கலங்கவில்லையோ
யார் செழிப்பிலும் போகத்தில் திளைக்கவில்லையோ
யார் பந்தம், பயம் மற்றும் கோபம் இவற்றின் பிடியில் சிக்கவில்லையோ
சந்தேகமின்றி அவரே ஞானி என்பதை தெரிந்து கொள்
அனைத்து திசைகளிலும் கால்களை உள்ளித்துக்கொள்ளும் ஆமையைப் போல்
புலன்களில் இருந்து தன் உணர்வுகளை இழுத்துக் கொள்வாரே
புலன்களும் அவரிடம் நெருங்க முடியாமல் தவிப்புடன் நிற்க
இறைவனைக் கண்ட அக்கணங்களில் அத்தவிப்பும் மறைந்திடுமே
நான் கேட்டேன் –
நீ கூறுவதை கேட்பதற்கு எளிதாய் இருக்கிறதே
எவரும் புத்தியை வெல்ல முடியும் என்றே தோன்றுகிறதே
சமநிலை அடைவது கடினமல்ல போல் தெரிகிறதே
நானே இலக்கு என்பது இப்பொழுது புரிகிறதே
கண்ணன் நகைத்துவிட்டு பிறகு கனிவுடன் சொன்னான் –
எளிதில் அடைவதல்ல நான் கூறியவை
புத்திசாலிகளையே புலன்கள் நன்கு ஏமாற்றுபவை
மனதை சூறாவளியாய் ஆக்கும் ஆற்றலுடையவை
முயற்சிகள் பல செய்தாலும் கலங்காதவை
நான் கேட்டேன் -
பிறகு எப்படி இருக்க வேண்டும் என்கிறாய் கேசவா
கண்ணன் தொடர்ந்தான் -
கண்கட்டும் புலன்களின் ஜாலங்களில் சிக்காமல்
அவற்றை அடக்கி ஒடுக்கி அமைதியாய்
புத்தி நிலைத்து அசையாது அமர்ந்திருக்க வேண்டும்
என்னை மட்டும் நினைத்திருக்க வேண்டும்
வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நான், செயலிழந்து அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன் ‘என்னை’ என்ற அவன் கூற்றினை?
ஓ............. இங்கு கண்ணன் உயிரும் உடலும், சதையும் அறிவை மயக்கும் அழகும் உள்ள கண்ணனாக இல்லாமல், கேலிப் பேசி சிரித்து மகிழும் கிருஷ்ணனாக இல்லாமல், எங்கும் நிறைந்த உருவும் அருவும் இல்லாத அந்த பரம்பொருளாய் அல்லவா சொல்கிறான்?
ஆனால் அவன் கூறுவது நடக்கக் கூடிய காரியமா என்ன? மனம் தொய்ந்தது.
இதோ ஒரு வருடத்திற்கு முன் நான் எழுதி வைத்த ஆங்கிலக் கவிதையை எடுத்துப் படிக்கிறேன்......
Beauty invites special compliments
I crave not to have one
Wealth cheers cruel attitudes
I need not retain one
Power rules ravening fowls
I grab not to enjoy one
Education shelters intellectual pleasures
I dream not to master one
Hatred guarantees feudal enemities
I desire not to possess one
Anger ignites mental imbalances
I like not to identify one
Jealousy cooks ugly delicacies
I yearn not to taste one
Selfishness adorns human minds
I strive not to buy one
Patience befriends many virtues
I dare not to lose one
Giving destroys grumbling greediness
I long to be blessed with one
Love transcends all boundaries
I pray only for such a one
இனி வரும் நாட்களில் கற்றுக் கொள்ளப் போகிறேனோ இல்லையோ, என் மனம் இக்கவிதையில் லயித்து இறுதி வரிகளில் நிலைக்கிறது.
Love transcends all boundaries
I pray only for such a one
இதுவே என் இன்றைய பிரார்த்தனையும்.
வரும் நாட்களிலாவது இந்த அஞ்ஞானிக்கு ஏதாவது புரியுமா என்ற சிந்தனையுடனே கீதையை வணங்கி மூடி வைக்கிறேன்....
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
Friday, February 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
your english poem is mind blowing.If everyone crave for that then there will be no worries in life.keep going well done!
anbudan aruna
Post a Comment