Friday, February 15, 2008

கீதை - பத்மஜா - ஒன்று

This earth is higher than all heavens; this is the greatest school in the universe
- Swami Vivekananda


மஞ்சள் பூக்கள் தரையில் கம்பளம் விரித்தது போல் அழகாக சிதறியிருந்தன. மரங்கள் கம்பீரமாக நின்றிருந்தன. நீருண்ட மேகங்கள் சூரியனை மறைத்திருந்தது. பறவைகள் மழை வருமோ என்று கூக்குரலிட்டு கூட்டணி உடையாமல் கூட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தன. இதமான குளிர் காற்று உடலில் ஊடுருவி என்னை சிலிர்க்க வைத்தது. நான் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தேன்.

சுற்றிப் பார்த்தேன். நேரு பூங்காவிலிருந்து அனைவரும் மழைக்கு பயந்து வேகமாக நடையை கட்டத் துவங்கினர். ‘ரசனை கெட்டவர்கள்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். இயற்கையை ரசிக்க வேண்டும் என்றால் என்னை கேளுங்கள்.

மேலே அண்ணாந்து பார்த்தேன். எத்தனை நாட்கள் என் சிறு வயதில் வானத்தைப் பார்த்திருப்பேன். தனிமை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் இயற்கையை காண நான் சலித்ததே இல்லை. மணிக்கணக்கில் உட்காருவதற்கு கூட எனக்கு ஆட்சேபணை இல்லை. ஏன் இன்னும் கூட நான் அப்படிதான். எனக்கு துணை வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. என் தனி உலகில் யாருக்கும் தெரியாமல் சஞ்சாரித்துக் கொண்டிருப்பேன்.

சிறு வயதில் அம்மாவின் கதைப்படி தேவர்களும் தேவதைகளும் வானத்திலே தெரிகின்றனரா அல்லது நிற்கின்றனரா என்று பார்த்த நாட்கள் எத்தனை எத்தனை. இன்னும் சொல்லப் போனால் திரிசங்கு சொர்க்கம் எங்கே இருக்கும் என்று கூட மேலே பார்த்து வியந்திருக்கிறேன். மழை பெய்யும் நேரத்தில் ‘அந்த தேவர்கள் மழையில் நனைந்தால் என்ன செய்வார்கள். நம்மை போல வீடு கூட அவர்களுக்கு இல்லையேஎன்று மிகவும் வருந்தியிருக்கிறேன் என் ஏழு வயதில். இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது என்னையே நினைத்து. நீங்களும் சிரிக்கிறீர்களா? உங்களுக்குள்ளும் இன்னும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கிறதுதானே?

வானமும் கடலும் அதன் நீல நிறமும் என்னை எப்பொழுதும் பரவசப்படுத்தும். இன்னும் சொல்ல போனால் ‘ராமன் எஃபெக்ட்’ படிக்கும் போது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

எதிரே ஒரு சிறுவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் நான் பார்த்த திரைபடம் மங்கலாக ஞாபகத்துக்கு வந்தது. நான் இரண்டாவதோ மூன்றாவதோ படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பள்ளியில் அந்த திரைபடத்திற்கு அழைத்து சென்றனர். கதை இப்படி போகும்.

பத்து வயது ஏழை சிறுவன் அவன். தாய் தந்தை இல்லாதவன். சாப்பிட கூட அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. பல இடங்களில் வீட்டு வேலை செய்வான். இடிசொற்களையும் கேட்பான். அவனுக்கு ஓவியம் இயற்கையாகவே வரைய வரும். பார்க்கும் சுவர்களில் எல்லாம் கரிக்கட்டையால் வரைந்து வைப்பான். பலர் அவனைத் திட்டுவர் அவர்கள் வீட்டு சுவற்றை அசுத்தப்படுத்துவதாக. யாரோ ஒருவர் முடிவில் அவன் கலையை மதித்து உயர்த்துவார். இதற்கிடையில் அந்த குழந்தை தாயை நினைத்து ஏங்கும். ஒரு சிலையின் முன் நின்று அழுவான். ஒரு நாள் ஒரு தேவதை வானத்தில் இருந்து இறங்கி வந்து கட்டியணைத்து முத்தம் கொடுப்பாள்.


இந்த பிச்சையெடுக்கும் பையன் வாழ்வில் உயர்வானா மாட்டானா? யாரிடம் கேட்பது? இவன் பின்னே அன்பு காட்ட யாராவது இருக்கிறார்களா இல்லையா? கேட்கலாமா என்று கூட தோன்றியது. இல்லை என்றால் என் அடுத்த நடவடிக்கை என்ன என்று எனக்கே புரியவில்லை.

சிறு வயதில் என்னை பாதித்த படம் இப்பொழுது நினைத்தாலும் என் கண்களில் நீரை வரவழைத்தது. எத்தனை இரவுகள் அந்த குழந்தையின் கஷ்டத்தை நினைத்து அழுதிருப்பேன். எத்தனை முறைஎத்தனை நாட்கள் வானத்தை பார்த்து “தேவதையே! நீ படத்தில் வந்ததை போல வாயேன்” என்று காத்திருப்பேன். என்ன பேதைமை இது என்று கூட புரியாத வயது எனக்கு. இல்லை என்னொத்த நண்பர்கள் என்னை போல் கூட்டிற்குள் இருந்ததில்லை. நான் மக்காகதான் இருக்க வேண்டும்.

சுய நினைவுக்கு வந்தேன். மழை தூர தொடங்கியது. துக்கங்களை எல்லாம் கரைத்து சிரிக்க வேண்டும் போல் இருந்தது. கை கட்டிக் கொண்டு மெல்ல நனைந்து கொண்டே நடக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு கவிதையை எழுத முயற்சி செய்யலாம் போல் தோன்றியது. யாராவது என்னையும் என் ரசனையையும் புரிந்து கொள்ள மாட்டார்களா என்று தோன்றியது. இந்த உலகை விட்டு மறைந்து விட வேண்டும் போல் இருந்தது. இறந்தபின் என்னாகும் என்றும் எண்ணத் தூண்டியது. என்னானால் என்னஇன்றைய வாழ்வே நித்தியம் என்றும் யாரோ மண்டையில் அடித்தது போல் இருந்தது.

கண்ணை ஓட்டினேன். அமர்ந்திருந்த ஒரு சிலரும் ஒதுக்குபுறத்தைத் தேடி ஓடி கொண்டிருந்தனர். தன் உடலுக்கும் உணர்வுகளுக்கும் கொடுக்கும் மதிப்பு அடுத்தவர் உள்ளத்திற்கும் இதே போல இவர்கள் கொடுப்பார்களா என்று அவர்களை உலுப்பி கேட்கலாமோ என்று கூட தோன்றியது.

முதல் தூரலில் எழுந்த மண்வாசனையை ரசித்தேன். ஆகா! எத்தனை உணர்ச்சி பொங்க பூமியும் மழையை வரவேற்கிறது நறுமணத்துடன். செடிகள்மரங்கள் அனைத்தும் தான் நனைந்து விட்ட சந்தோஷத்தில்தன்னை தழுவி ஆரோகணித்த மழைக்காக இடதும் வலதுமாக அசைந்து சந்தோஷமாக கையாட்டின. பூக்களின் மேலும் இலையின் மேலும் தேங்கியிருந்த ஒரு சில துளிகள் ‘நாங்கள் அழவில்லைஇது ஆனந்த கண்ணீரேஎன்று அழகாய் சொல்வது போல் இருந்தது.

எனக்கு பூக்களையோ இலையையோ தேவையில்லாமல் பறிக்க மனம் வராது. அதற்கு வலிக்குமோ என்ற பயம்தான். அப்படியே பறித்தாலும் மனதிலே மன்னிப்பையும் உத்தரவையும் கேட்டே பறிப்பேன். மறுபடியும் சிரிக்கிறீர்களா! என்னை இந்த வயதில் மாற்றிக் கொள்ள முடியாது. இப்படியே இருந்து விட்டு போகிறேனே.

சிதறியிருந்த பூக்களை ஒவ்வொன்றாக பொறுக்கி மடியில் வைத்துக் கொண்டேன். யாராவது கால்பட்டு அது மிதிபட வேண்டாமே. மரத்தில் இருந்து சில பறவைகள் என்னை கூவி அழைப்பதைப் போல் இருந்தது. என்னதான் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு நிமிடம் மேலே பார்த்து வியந்து நடக்க எத்தனித்த போதுகாலில் ஏதோ ஒரு தாள் தட்டுபட்டது. யாரோ வேர்கடலை சாப்பிட்டு அதை குப்பைத் தொட்டியில் போடாமல் அப்படியே கீழே போட்டிருந்தார்கள்.

எனக்கும் ஒரு பழக்கம். இந்த மாதிரி ஏதாவது கிடைத்தால்அதில் என்னதான் எழுதியிருக்கிறது என்று படிக்க மனம் பரபரக்கும். சில சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி இதை பிரித்து பார்த்த போது துணுக்குற்றேன்.

யாரோ ஒரு வளரும் கலைஞனின் வண்ணப் படைப்பாக இருந்தது. குண்டு குண்டான கையெழுத்தில் கீதையின் முன்கதை சுருக்கத்தை எழுத முயன்றிருந்தான். எப்படி இது பொட்டலம் கட்ட வந்தது என்று தெரியவில்லை. அந்த தாளில் பாதியிலிருந்து தான் இருந்தது. இதோ படிக்கிறேன் கேளுங்கள்.

இவ்வாறு பங்கு சண்டையில் இரு சகோதரர்கள் போர் முழக்கமிட்டாரே
அந்தகன் திருதிராட்டினன் உண்மை சாராமல் வாய்மூடி மௌனி ஆனாரே

கண்ணனின் தூது அனைத்தும் பயனின்றிதான் போனதே
‘நானா என் சேனையா’ என்றே அவனும் வினவினானே

முட்டாள் துரியோதனன் ‘சேனையே’ என்று வெற்றிக் களிப்பில் சிரித்தானே
கண்ணனும் அர்ச்சுனன் வேண்டுகோளுக்கிணங்க தேரோட்டியாக மாறினானே

பீஷ்மரும் துரோணரும் எதிர் அணியில் வில்லேந்தி நின்றனரே
இரு அணியினரும் அழிவை எதிர்நோக்கி அணிவகுத்தனரே

தேரை இரு அணிகளுக்கிடையில் நிறுத்துமாறு பார்த்தன் வேண்டினானே
பாட்டனாரையும் குருவையும் எதிரணியில் கண்டு கலங்கினானே

போரைக் கண்டு அஞ்சாத வீரன் அர்ச்சுனனே
உணர்வுகளின் பிடியில் சிக்கி தவிக்கும் பாமரன் ஆனானே

கண்களில் நீர் வடிய உடலும் உள்ளமும் பதைபதைக்க நின்றானே
நியாயங்கள் பல பேசி போர் செய்ய வேண்டாம் என்றானே

இனி நான் போரிட போவதில்லை என்று காண்டீபத்தை கீழே வைத்தானே
நண்பனின் பலவீனம் கண்டு கண்ணன் உண்மையை உணர்த்தவே முயன்றானே

‘இவர்களை கொன்று கிடைக்கும் அரியாசணை தேவையில்லை’ என்று அர்ச்சுனன் கதறினானே
பிறகு முடிவாக ‘என் கடமையை பற்றி சொல்’ என்று சீடனாகி கண்ணனிடம் கேட்டானே

சிரித்த முகமுடையோன் உபதேசம் வேண்டிய பார்த்தனுக்காக தர்மத்தின் கீதம் பாடினானே
அப்பாட்டின் இனிமையை வியாச பகவானும் நமக்காக எழுதி வைத்தாரே

அதை பல முறை படித்த பின்னும் எட்டாத என் மூளையில் கண்ணனே வந்து குட்டினானே
வியந்து நிமிர்ந்து பார்த்து எழுந்த என்னை அமர செய்து கன்னத்தில் அன்பாய் தட்டினானே

அந்த தட்டலில் கரைந்து நனைந்து பெருகிய என் கண்ணீரை அவனும் நோக்கினானே
நீ அதிசய மனிதன் என்று நினைத்தது என் தவறே என்று போக எத்தனித்தானே

உன்னை ஆசானாய் ஏற்றும் நீ காட்டும் அன்பு இவ்வளவோ என்று நானும் கலங்கி கேட்டேனே
அவனும் உடனே மனமிளகி என்னருகில் வந்தமர்ந்து இவ்வாறு மொழிந்தானே



கீதையே இங்குதான் ஆரம்பிக்கிறதல்லவோ? இதற்கு பிறகு என்ன எழுதியிருப்பான்? கடைசி ஆறு வரிகளை மறுபடியும் படித்தேன். அந்த கவிஞனின் தவிப்பு எனக்கு கொஞ்சம் புரிவதாக இருந்தது. இப்படி ஒரு அன்பான தோழனும் ஆசானும் கிடைப்பார்களா தெரியவில்லை என்று நினைத்தேன்.

மழை நின்று சூரியன் தன் சாயங்கால மஞ்சள் வெய்யிலை காட்ட எத்தனித்தான். அழகிய வானவில்லை வானத்தில் கண்டு குதூகலித்தேன். எத்தனை நிறங்கள் வெளிபடுகிறது ஒரு வெள்ளை நிறத்திலிருந்து. மனிதனும் அப்படிதானோ! பல நேரங்களில் பல முகங்களை காண்பிக்கிறானே இவன். இருந்தாலும் வானவில்லிற்கு இருக்கும் அழகு இவனுக்கு இல்லை. ஏன் அப்படி? மனிதன் பல முகங்களை கொண்ட ஒரு அபூர்வ பிறவியே.

சரிநேரமாகி விட்டது. நடப்போம் என்று நினைத்து வீட்டை நோக்கி நடக்க துவங்கினேன். கையில் இருந்த கவிதை என்னை உறுத்தியது. அதை தூக்கியெறிய மனம் வரவில்லை. நாமே இதை தொடர்ந்து முயன்றாலென்ன என்று மின்னலைப் போல ஒரு எண்ணம் வந்தது.

முயன்றுதான் பார்ப்போமே என்று நினைத்த கணத்திலேயே வாழ்வில் ஒரு புது அர்த்தம் கிடைத்தது போல் உணர்ந்தேன்.

இந்த மாதிரி நேரங்களில் எதையாவது படித்தால் தேவலை போல் இருந்ததால் என் கைப்பையில் இருந்த கீதாஞ்சலியை எடுத்தேன். எப்பொழுதும் போல தாகூரின் சிலிர்க்க வைக்கும் இந்த வரிகள் இன்றும் ஏனோ என் மனதில் என்னவோ செய்தன.

Pluck this little flower and take it, delay not! I fear lest it droop and drop into the dust.

I may not find a place in thy garland, but honour it with a touch of pain from thy hand and pluck it. I fear lest the day end before I am aware, and the time of offering go by.

Though its colour be not deep and its smell be faint, use this flower in thy service and pluck it while there is time.[/size]

மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டும் வரிகள். என்ன கற்பனைஎத்தனை மென்மை இந்த வரிகளில்! இதை விட அழகாக யாரால் சொல்ல முடியுமா என்ன?

தாடி கவிஞரே! உன்னை உன் எழுத்துகளுக்காகவே மிகவும் நேசிக்கிறேன். எங்கே இருக்கிறாய் நீ?

வானத்தை பார்த்தும் எப்பொழுதும் போல் பதில் கிடைக்காதலால் மனதிற்குள் சிரித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன்.

-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30

No comments: