Friday, February 15, 2008

கீதை பத்மஜா- குரு வந்தனம்

ஜனார்த்தனா! அச்சுதா!
வேதத்தின் சாரமாய் திகழும் அவதார புருஷனே
உலகமெல்லாம் போற்றிக் கொண்டாடும் உன்னத ரூபனே
பல இலக்கியங்களின் தன்னிகரற்ற நாயகனே
ஓம்காரத்தின் இரகசியத்தை உரக்க உரைத்தவனே
உனக்கு என் பணிவார்ந்த வணக்கம்


தாமோதரா! மாதவா!
அனைத்து உலகமும் உன்னை தேடி அலைய
உன்னைத் தவிர வேறொன்றும் அறியாத பேதையவள்
உன் அன்னையின் அன்பிலே விரும்பி கட்டுண்டவனே
உண்மையை உன் வாயால் அவளுக்கு உணர்த்தியவனே
உனக்கு என் அன்பார்ந்த வணக்கம்


ராதாகிருஷ்ணா! முரளீதரா!
பசுவும் கன்றும் மரமும் பறவையும் தன்னை மறக்க
புல்லாங்குழல் ஊதி ஜகத்தை ஆட்கொண்டவனே
கோபியர்களின் ஆன்மீகக் காதலை தூண்டுவித்து ராச லீலை புரிந்தவனே
உன்னைப் போல் ஒரு காதலனை இவ்வுலகம் கண்டதில்லை
உனக்கு என் கண்ணீர் சார்ந்த வணக்கம்


கேசவா! யோகேஷ்வரா!
அர்ச்சுனனுக்கு நீ கொடுத்த உயர்ந்த இடம் அவனுக்கே தெரியுமோ
எனக்கு பொறாமை என்று ஒன்றிருந்தால் அது அவனை குறித்துதானோ
எத்தனை முறை படித்தாலும் என் மூளையில் எட்டாத உன் கீதையை
உன் திருவாயால் எனக்கு மொழிவாயாக
உனக்கு என் மரியாதை கலந்த வணக்கம்


கண்ணா! அனந்தா!
உன் உபதேசத்தை புரிந்துக் கொள்ளும் ஆற்றலை கொடு
அதை என் வாழ்க்கையில் பிரதிபலிக்க செய்யும் உறுதியை கொடு
மற்றவரின் வெறுப்பையும் இகழ்ச்சியையும் படிக்கட்டுகளாக்கி கொடு
கற்பூரத்தைப் போலவும்ஒரு வாழ்க்கையையும் கொடு
உனக்கு என் உள்ளார்ந்த வணக்கம

என் வந்தனம் உனக்கும்
உன் அறிய படைப்பிற்கும்
அதை எழுதிய வேத வியாசருக்கும்
ஏற்றுக் கொள்வாயோ என்னையும்

-- அன்பே சிவம் - பத்மஜா

No comments: