Friday, February 15, 2008

கீதை - பத்மஜா - நான்கு

Neither too loose nor too tight but just right.

- Gautama Buddha

..............


தற்கொலை ஏன் செய்து கொள்கிறார்கள்?

இன்பம் வரும்பொழுது எல்லையின்றி அனுபவிக்கும் மனம், துன்பம் வரும் நேரத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல் கோழையாவது எதனால்?

அடுத்தடுத்து வரும் இன்பம்தனை சளைக்காமல் ஏற்கும் மனம் போதும் என்று தற்கொலை செய்து கொள்வதில்லையே? ஆனால் துன்பக் காலத்தில் அதன் வலியிலும் வேதனையிலும் மட்டும் தற்கொலை எண்ணம் வருகிறதே?

இன்பத்தை முடிக்க விரும்பாதலால் தற்கொலை செய்து கொள்வதில்லையோ? துன்பம் முடிந்துவிடும் என்று தற்கொலை செய்து கொள்கிறார்களோ?

துன்பம் வருவது எதனால்?

எதிர்ப்பார்ப்புகளால் ஏமாற்றங்கள், ஏமாற்றங்களால் இயலாமை, இயலாமை ஏற்படுத்துவது கோபம் அல்லது சுய பச்சாதாபம், அதனால் வருவது வேதனைகள், பின்னே அதுவே மறக்க முடியாத மறுக்க முடியாத துன்பமாய் மாறிவிடுகிறதோ?

இரவையும் பகலையும் ஏற்கும் மனிதன், குளிரையும் வெய்யிலையும் ஏற்கும் மனிதன், அதில் இருந்து ஒரு பாடத்தை கற்க மறந்து விடுகிறான். இரவானது பகலாய் கண நேரத்தில் மாறிவிடுவதில்லை. காலம் என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்ணிழையைக் கொண்டு மெதுவாகவே மாற்றங்கள் நிகழ்கின்றன.

அது போலவே, நம் வாழ்விலும் காலம் காலனாய் இல்லாமல் மருந்தாய் வரவேற்கத் தகுந்த மாற்றமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைப் புரிந்து கொள்ளாதலால்தான் தற்கொலை உடனடி தீர்வு என்று முடிவெடுக்கிறார்களோ?

இந்த அரிய மனித உயிரை மாய்த்துக் கொள்வதால் யாருக்கு என்ன பலன்? நம் துன்பதில் இருந்து விடுதலை அடைந்து விட்டால் போதுமா? நம்மை சார்ந்தவர்களை நம் முடிவினால் அளவிலா துன்பத்தில் அல்லவோ ஆழ்த்துகிறோம்?

இம்மாதிரி முடிவெடுக்கத் தூண்டுவது எது?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாத்தானும் தேவதையும் குடி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. விகிதங்கள் தான் ஒருவனை மற்றொருவனிடமிருந்து வேறுபடுத்துகின்றது. அதனாலேயே சிலரை devilஎன்றும் சிலரை angel என்றும் கூறுகிறோம்.

‘Can devils ever become angels?’

இந்த கேள்வி என்னைத் தாக்குகிறதே! Devil ஆன நான் angelஆக முடியுமா? ஏன், என் இறுதி மூச்சுவரை போராட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இதற்கு வழி?

போன அத்தியாயத்தில் படித்த ஞானத்தின் பாடம் மிக கடினமாக அல்லவா இருக்கிறது எனக்கு. ஆகவே, என் நிலையறிந்து கண்ணன் சொன்னான் –


ஞானத்தின் வழியையே இதுவரை நான் எடுத்தியம்பினாலும் நண்பனே
யோகம் என்னும் மற்றுமொரு பாதையும் இருப்பதை அறிவாயோ
செயல்களால் கர்மங்களால் பின்னிப் பிணைந்த வாழ்வினிலிருந்து விடுதலையடைய, என் தோழனே
என் மற்றைய கூற்றையும் கேட்டுத் தெளியவே விரும்புவாயோ


என் தலையாட்டலில் மகிழ்ந்து அவன் தொடர்ந்தான் -

இதனால் எந்தவித கெடுதலும் உனக்கு வர வாய்ப்பில்லை
உன் முயற்சிகள் எதுவும் வீணடைய சாத்தியமில்லை
யோகத்தின் வழியை சிறிதளவேனும் சார்ந்து நடப்பவனுக்கோ
பயம் என்னும் கொடிய நோய் அண்டுவதில்லை


என்னை இவ்வாறு தேற்றியவன் மேலும் சொன்னான் -

எனதருமை தோழனே! கர்மப் பாதையில் நடப்பவன்
ஒருமுக நோக்கு எப்பொழுதும் தேவை என்பதை அறிவான்
அது இல்லாதவனுக்கோ பலவித மார்க்கங்களால் கவரப்படுவான்
அதன் எண்ணக் கிளர்ச்சியில் மயங்கியே இலக்கைத் தொலைப்பான்

அறிவிலிகளோ வேதங்களின் ஜால வார்த்தைகளில் மயங்கி கிடப்பர்
அதில் பிரதிபலிக்கும் இன்பங்களைத் தேடியே திரிவர்
ஆசைகளால் நிரம்பியே சொர்க்கம் ஒன்றே இலக்கு எனக்கொள்வர்
இன்பத்தை நோக்காக கொண்டே கர்மங்களை செய்வர்


மகாபாரதத்தை எழுதியவர் ஸ்ரீ கிருஷ்ண துவய்பாயன வியாஸர் என்பர் (பகவத் கீதை மகாபாரதத்தின் சாரமாகும்). அது மட்டுமின்றி, 18 வகை புராணங்களையும் எழுதியவர் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முன் வியாஸர் என்ற பெயரில் பலர் இருந்தாலும் அவரை மட்டுமே குறிக்கும் பெயரானதற்கு காரணம் கடினமான வேதங்களை நான்காக பிரித்து மனித சமுதாயத்திற்கு தந்ததால்தான் என்பது தொன்றுதொட்டு வரும் கூற்று. அதனாலேயே அவரை ‘வேத வியாஸர்’ என்றழைத்து ‘குரு பூர்ணிமா’ அன்று மரியாதை செலுத்தி தலைவணங்குகிறோம்.

அவரே கீதையில் வேதங்களை சாடினால் எப்படி? அதையும் பரமாத்மாவான கண்ணனே இப்படி சொல்வது தகுமா என்ன?

என் மூளையை கணநேரத்தில் புரிந்து கொண்ட கண்ணன் என் அறிவை சிறிது தடவிக் கொடுத்தான். ஆம். இப்பொழுது புரிகிறது.

ஒவ்வொரு வேதமும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை – கர்ம காண்டமும் ஞான காண்டமும் ஆகும். கர்ம காண்டம் சுகம், சொர்க்கம் என்று சிற்றின்பத்தை வேண்டுபவருக்கு என்றும் ஞான காண்டம் பேரின்பத்தை வேண்டுபவருக்கும் என்றும் உள்ளன.

இதை மேலும் விரிவாக பிறகு பார்க்கலாம்.

இங்கு கண்ணன் கூறுவது கர்ம காண்டத்தில் குறிக்கப்பட்டுள்ள வேத மொழிகளே ஆகும் என்று இப்பொழுது எனக்கு புரிந்தது.

சுகத்திலும் போகத்திலும் திளைத்து எழ விரும்புபவர்களால் இந்த யோக முறையை அனுஷ்டிக்க முடியுமா?


அதற்கு கண்ணன் பதிலுரைத்தான் –

இவ்வாறு சுகம் இன்பம் என்று கவரப்பட்டோர் ஒருமுக நோக்கின்றி
மலையே அசைந்தாலும் நான் அசரேன் என்ற உறுதியின்றி
தியானத்தின் சுகம்தனை அனுபவிக்கும் பக்குவமின்றி
உன்னத சமாதியின் நிலையை அறியாமல் வாழ்வை வீணாக்குவர்

மேலும் கவனமாக கேள்! வேதங்கள் கையாள்வது மூவகை குணங்களாகும்
வேற்றுமைகளின் பிடியிலிருந்து விடுதலையடைவதே உனக்கு உகந்ததாகும்
சத்துவம் என்னும் தூய்மையில் என்றும் நிலைத்திருப்பதே உன்னதமாகும்
நான், எனது என்னும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு ஆன்மாவை உணர்வதே சிறந்ததாகும்


வெள்ளத்தின் நடுவில் கிணற்று நீரின் உபயோகம்தான் என்ன
ஆன்மாவை உணர்ந்த பிராமணனுக்கு வேதங்களின் பயன்தான் என்ன
இந்நிலையை அடைவது அத்தனை எளிதா என்ன
இருப்பினும் ஒரு சிறந்த வழியை சொல்கிறேன் ஏற்பாயா என்ன


பிராமணன் யார்? பிறப்பால் பிராமணன் என்பதால் ஆன்மாவை உணர்ந்தவன் என்றாகிவிடுமா? அல்லது அவன் மட்டுமே ஆன்மாவை உணரத் தகுந்தவன் என்று கூற முடியுமா?

இல்லை. எவனொருவன் தன் பழக்க வழக்கத்தால், சிந்தனை சிறப்புகளால் உயர்ந்த சத்துவக் குணத்தைக் கொண்டு நல்லவையே செய்கிறானோ அவனே பிரம்மம் என்னும் எங்கும் நிறைந்த பரமாத்மனை உணரத் தகுந்தவன். அவனே உணர்பவன். அவனே பிராமணன்.

சரி. கண்ணன் ஏதாவது சுலப வழியை சொல்கிறானா என்று சிறிது கவனித்து கேட்போமோ. அந்த அழகிய சிவந்த அதரங்களிலிருந்து வார்த்தைகள் இவ்வாறு என்னை வந்தடைகின்றன....


உன் கடமை என்றென்றும் பணி செய்து கிடப்பதே என்று புரிந்து கொள்
செயல்களின் பலன்களில் நாட்டம் இருக்க கூடாது என்பதில் கவனம் கொள்
பலன்களை எதிர்பார்த்து செயல்களை செய்யக் கூடாது என்பதில் உறுதி கொள்
செயல்களுக்கு பயந்து சோம்பேறியாகவும் திரிய கூடாது என்பதை குறித்துக் கொள்

ஆகவே கர்மங்களை செய்வதில் அச்சம் வேண்டாம் என் நண்பனே
உறவை அறுத்தெறிந்து யோகத்தில் நிலைப்பாய் என் தோழனே
வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை அடைவாய் என் அன்பனே
இச்சமநிலை அடைந்த மனமே யோகம் என்பதை அறிவாய் என் பார்த்தனே



யோகம் என்றவுடன் என் நினைவுக்கு வருவது இதுவே....

குரு தன் சீடனைப் பார்த்துக் கேட்கிறார், “என்ன செய்கிறாய் இப்பொழுது?”

அதற்கு சீடன், “ஐயா, யோகங்கள் கற்றுக் கொண்டிருந்தேன். இப்பொழுது அனைத்தையும் முடித்துவிட்டேன்,” என்றான்.

குரு அவனைப் பணிவுடன் பார்த்து, “யோகாவை முடித்து விட்டீர்களா? நான் உங்கள் காலில் அல்லவோ விழ வேண்டும். ஏனெனில் நீங்கள் பதஞ்சலியாகத்தான் இருக்க வேண்டும்,” என்றாராம்.

அது போல நம்முள் இருக்கும் அகங்காரம் என்ற தேவையற்ற அலங்காரத்தை களைய வழி உண்டா? மேலும் நம் படிப்பை தொடருவோம்.

-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30

No comments: