Love gives naught but itself and takes naught but itself. Love possesses not nor would it be possessed. For love is sufficient unto love.
- The Prophet, Kahlil Gibran
........
Krishna Govinda Gopal Gaate Raho…
Log kahte hain Bhagvan aate nahin…
Draupadi ki tarah bulaate nahin….
Shabari ki tarah khilaate nahin…
மாறி மாறி இந்த வரிகள் ஒலிக்க, நடன ஒத்திகை செய்து கொண்டிருந்த பெண் அந்த பெரிய கூடத்தில் சலங்கைகள் சிணுங்க உருக்கமான பாவத்துடன் ஆடிக் கொண்டிருந்தாள். ராமாயண சொற்பொழிவு முடிந்து சில நிகழ்ச்சிகளை வைத்திருந்தார்கள். அதில் இதுவும் ஒன்று.
ஓரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சபரியை சிலாகித்து அவள் செய்யும் போதுஅடக்கமாட்டாமல் அழுகை வந்தது.
ராமாயணத்தில் சபரியை எனக்கு மிகவும் பிடிக்கும். என்ன ஒரு அலுக்காதசலிக்காத அன்பை வெளிப்படுத்தியவள்! சுத்தமான அன்புடன் தன் குருவின் வாய்மொழியை நம்பி ஒவ்வொரு நாளும் தன் இறைவனின் வருகைக்காக குடிலை சுத்தமாக்கி, பழங்களை பறித்து, வழியில் அமர்ந்து இறைவன் வருகிறானா என்று வருடக்கணக்கில் காத்தது மட்டுமில்லாமல் ராமரின் வருகையின் போது ஒவ்வொரு பழத்தையும் சுவைத்து பிறகே படைத்த தூய இதயம் கொண்டவள்.
நடனப்பெண்ணே! நடனத்துக்காக பாவங்களை காட்டி அபிநயம் பிடிக்கிறாயா அல்லது உன் மனதில் கண்ணனையும், திரௌபதியையும், சபரியையும் நினைத்துதான் ஆடுகிறாயா? ஆனால் ஒவ்வொரு ஒத்திகை முடிந்த பின்னும் நீ கேலியும் கூத்துமாய் இருக்கிறாயே! என்னால் மட்டும் மனதிலிருந்து பாவங்களை சுலபமாக மாற்ற முடியவில்லையே!
அரண்மணை போன்ற வீட்டில் குளியலறை தேடி ஓடினேன். (அந்த தனித்த இடத்தில் தான் எப்பொழுதும் என் அழுத்தங்களும்அழுகைகளும் தடைகல் ஏதுமின்றி என்னுள்ளிருந்து வெளி வரும்.)
கண்ணிருந்தும் காணவில்லை
வாயிருந்தும் பேசவில்லை
செவியிருந்தும் கேட்கவில்லை
அழகிருந்தும் ஆணவமில்லை
அறிவிருந்தும் அகந்தையில்லை
மொழியிருந்தும் மோகமில்லை
கண்ணீரிலும் கவலையில்லை
சிரிப்பிலே கள்ளமில்லை
உறுதியிலே உறவில்லை
பாசத்திலே நோக்கமில்லை
முகத்திலே பொய்யில்லை
சுகத்திலே பெருமையில்லை
துக்கத்திலும் வருத்தமில்லை
சுற்றமிருந்தும் எதிர்பார்ப்பில்லை
கேட்டவை தட்டவில்லை
கலையிலே காட்டமில்லை
வேள்வியிலே வேதனையில்லை
நெஞ்சிருந்தும் கலக்கமில்லை
மனமிருந்தும் மயங்கவில்லை
காதலிலே காமமில்லை
அன்பிருந்தும் ஏக்கமில்லை
உணர்விருந்தும் வேகமில்லை
மென்மையிலே நடுக்கமில்லை
அணைப்பிலே சுயநலமில்லை
வாழ்விருந்தும் பற்றில்லை
இப்படி வாழ்வை நன்கு புரிந்து எப்பொழுதும் நான் வாழ்வேனா என்று தரையில் மண்டியிட்டு கதறியும்என்னை அந்த இறைவனும் புரிந்து கொள்ளாமல் கைவிட்டுவிட்டானோ?
என் நெஞ்சை யாரோ பிசைவதை போல் இருந்தது.
ஒரு குழந்தையை போல் என்னை பாவித்து என் கையை பிடித்து நடத்தி செல்பவர் யார்?
எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. இறைவன் இருக்கிறானா இல்லையா?
இதற்கு பதிலாக என்னுள்ளிருந்து இந்த வரிகள் எதிரொலித்தன.
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நீ நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
…
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
முகத்தை கழுவி வெளியே வந்தேன்.
எனக்கு வாழ்க்கையில் குறிக்கோள் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. அதனுடன் போராடுவதும் இல்லை. அதன் போக்கிலே விட்டு விட்டு அனைத்து மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் சுகத்தையும் துக்கத்தையும் இகழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் நன்றியுடன் ஏற்றுக் கொள்ள துடிக்கும் ஒரு சராசரி பெண்ணே நான்.
இறக்கும் தருவாயில் கூட பழைய நினைவுகள் என்னை என் சிறு வயது கனவில் வரும் வெள்ளை தேவதை போல காட்டவே விரும்புகிறேன்.
ஆகா! ரொம்பவே என்னைப் பற்றி பேசி விட்டேனோ?
எண்ணங்களுக்கு தான் முடிவேது?
சுயநினைவுக்கு வந்த போதுஎன் வீட்டு ஜன்னலில் அமர்ந்திருந்த புறாக்களையும் அதன் உரையாடல்களையும் அப்பொழுதுதான் பார்த்தேன். ஒரு கவலையும் இல்லாமல் தலையை சாய்த்து இப்படியும் அப்படியும் பார்த்து தன் அலகால் ஒரு ஆண் புறா தன் துணையை அன்பாய் தடவி கொடுத்ததை மெய்மறந்து பார்த்த போது என் மனம் அந்த கள்ளமில்லா அன்பை கண்டு துள்ளிக் குதித்தது.
மனதில் திடீரென்று அன்றொரு நாள் பூங்காவில் கிடைத்த கவிஞனின் கீதையும் என் சங்கல்பமும் நினைவுக்கு வந்தன. அந்த கடைசி ஆறு வரிகளும் ஞாபகத்திற்கு வந்தன.
எத்தனையோ மகான்களும் அறிவாளிகளும் ஆராய்ந்து உரைத்த ஒரு உண்மையை ஒன்றும் அறியாத நான் ஏன் கஷ்டப்பட்டு என் சிறிய அறிவைக் கொண்டு அலச முனைய வேண்டும்?
உணர்வுகளின் போராட்டங்களையும் அதை வெற்றிக் கொள்ளும் ரகசியத்தையும் புரிந்து கொண்டு நான் வாழ விரும்புகிறேன். எனவேஇது அடுத்தவர்களுக்காகவோ என் புலமையை காண்பிப்பதற்கோ அல்லாமல் எனக்காகவே எழுதுவது.
சரி.
என் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு மேல் கீதையை திறந்து இரண்டாம் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தேன். கீதையை இதற்கு முன் ஒன்றிரண்டு முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் என் மனநிலைக்கேற்பவே அதன் அர்த்தம் மனதில் பதியும்.
திறந்த உடனே தெரிந்த அந்த ஸ்லோகங்களை படித்த போது என்னை யாரோ சாட்டையால் அடித்ததை போல் உணர்ந்தேன்.
வார்த்தைகள் என் மூளையில் விளையாடின. அதன் சாரம் என்னுள்ளே இறங்க எத்தனித்தது.
எனக்கு புரிந்த உண்மையை வைத்து சிந்திக்கிறேன். எழுத தொடங்குகிறேன்.
இதோ படியுங்கள்.
நான் கேட்டேன் -
படைப்பாளியின் அளப்பறிய படைப்பு என்னை மயக்கலாம்
அவன் பெருமையைக் கண்டு பாரே வியக்கலாம்
திரும்பின இடங்களில் எல்லாம் அவனையே பார்க்கலாம்
என் மனதின் பிரதிபிம்பமோ என்றே பிறகு உணரலாம்
அன்பர்களும் எதிரணியில் நின்றால் என் உள்ளம் தாங்குமோ
நெஞ்சு பதைக்க கேட்கிறேன் அவர்களுக்குதான் தீங்கு நேருமோ
என் சுயநலத்தால் பல குடும்பங்கள் தான் கலங்குமோ
சொல் நண்பனே! என் கண்ணீர் நிலைதான் இனி மாறுமோ
கண்ணன் சொன்னான் -
அறிவாளி என்றே உன்னை நான் நினைத்தேன்
சிறந்த போர்வீரன் என்றே பெருமிதமடைந்தேன்
என் உயிர்த் தோழன் என்றே உலகம் உணர செய்தேன்
மனக் குழப்பத்தால் தவிக்கும் உன்னை நான் அணைத்தேன்
என் சிங்கமே! சிலிர்த்துக் கொண்டு எழுந்து கொள்ளடா
அஞ்சா நெஞ்சமாய் உன்னையே நீ புரிந்து கொள்ளடா
பேடித்தன்மை தேவையில்லை என்று உணர்ந்து கொள்ளடா
பலவீனத்தை கிழித்து உரத்த குரலில் கர்ஜித்து கொள்ளடா
தொய்ந்த தோள்களை நிமிர்த்தி நேரே என் முன்னே நில்லடா
வலுவற்ற இதயம் போரில் ஒரு களங்கம் என்றே உணர்ந்து கொள்ளடா
தெளிந்து உன் அன்பை என் கண் கொண்டே சிறிது பாரடா
உன் கண்ணீருக்கு நான் சொல்லும் பதிலைதான் கொஞ்சம் கேளடா
மேலே அவன் சொன்னான் -
எதற்கு நீ வருந்துகிறாய் என்று எனக்கு புரியாமலில்லை
இதற்கு நான் பதில் சொல்லாமல் இருக்க போவதில்லை
நீயும் என் பதிலைக் கேட்டு புரிந்து கொள்ளாமல் இருக்க போவதில்லை
இருந்தும் நீ பேசியதன் உண்மை நான் உணராமலில்லை
உயிர்-உடல் காதலின் வெற்றி தோல்வியால் ஞானியர் வருந்துவதில்லை
எந்தவித துக்கமும் அவர்கள் அருகே நெருங்குவதுமில்லை
என் இந்த முதல் கூற்றை மனதில் நிறுத்தினால் உனக்கும் கவலையில்லை
என் நண்பனே! ஏனோ உன் துன்பம் எனக்கு காண சகிக்கவில்லை
நானும் நீயும் இதற்கு முன் இல்லாமல் இருந்ததில்லை
மனதில் பதிந்தவர்கள் உன்னை விட்டு என்றும் பிரிவதில்லை
அழிவிற்கு பயந்து நீ போரிடாமல் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை
ஏனெனில் யாரும் இதில் தொலைந்து எங்கும் போவதில்லை
தோழாஉயிர் வாழ உடல் தேவை என்று நீ அறியாமலில்லை
பிறப்பில் இருந்து இறப்பு வரை உடலில் மாற்றங்கள் நிகழாமலில்லை
வாலிபத்தில் யாரும் குழந்தை உருவை தேடி அலைவதில்லை
கடந்து போன வாலிபத்தை முதுமையில் தேடுவதில் ஒரு அர்த்தமுமில்லை
முதுமை உடலிலே இளமையும் தொலைந்து போவதில்லை
உடலின் கடந்து போன பருவங்களை நாம் காண்பதில்லை
இறப்பின் பின் உயிரும் உடலுடன் சேர்ந்து அழிவதில்லை
அழிவற்ற உயிரும் மற்றொரு உடலில் நுழைவதை நாம் அறிவதில்லை
நான் சொன்னதால் எதையும் ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை
இருந்தும் தெரிந்து கொள்உன்னிடம் பொய் கூற எனக்கு அவசியமில்லை
இதை அறிந்த எவனும் இழப்பிற்கு வருந்தி அழுவதில்லை
இருந்தும் இந்த உண்மை பலர் கண்களுக்கு புலப்படுவதில்லை
புலன்களின் ஜாலங்களில் மயங்குவது மனித இயல்பு அல்லவோ
இவை தரும் சுகமும் துக்கமும் நிலையில்லை அல்லவோ
இதற்கு ஆதியும் அந்தமும் உண்டு என்பதை நீ ஏற்பாயல்லவோ
இதை வீரத்துடன் எதிர்கொள்ளவே வேண்டுகிறேன் என்று உனக்கு புரியவில்லையோ
உறுதி கொண்ட மனிதன் எவனோ அவனை நான் நன்றே புகழ்வேன்
சுகம் துக்கம் ஒன்றே என்றிருக்கும் அவனை நன்றே அறிவேன்
கலங்காத வீரன் அவனை எதுவும் தீண்டா என்பதை நன்றே உணர்வேன்
அவனே ஆன்மாவின் அழிவின்மை உணர தகுந்தவன் என்பதை நன்றே உரைப்பேன்
எழுதி முடித்து விட்டு படுக்க சென்றேன். கீதையும் மனதிற்குள் சிறிது இறங்கியது. ஆன்மாவை பற்றி மேலும் படிக்க வேண்டும்.
இதனால் என் வாழ்க்கை தரம் உயருமா?
-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30
Friday, February 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment