Friday, February 15, 2008

கீதை பத்மஜா- மகாபாரதத்தின் சில முக்கிய கதாபாத்திரங்கள்

கீதை மகாபாரதத்தின் அங்கமாதலால், அதிலுள்ள
முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றி மனதில் அலசிய போது சிலர் என்னை எழுத தூண்டினர். அந்த எண்ணங்களின் வெளிபாடே இந்த முயற்சி.

பீஷ்மர்

தந்தையின் ஆசைக்காக தூது சென்றவர்
அரியணை தேவையில்லை என்று உதறித் தள்ளியவர்
திருமணம் வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்தவர்
ஹஸ்தினாபுரத்தை காப்பதே தன் கடமை என்றிருந்தவர்
கங்கையின் புத்திரன் என்ற சிறப்பு பெற்றவர்
பாகுபாடு தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்
வீரத்திலே சிங்கத்தையும் மிஞ்சும் பெருமையுடையவர்
தேவவிரதன் என்ற இயற்பெயர் உடையவர்
பீஷ்மஎன்று தேவர்களாலும் புகழப் பெற்றவர்
இறப்பு அவர் விரும்பினாலன்றி தொட முடியாத வரம் பெற்றவர்
அம்பையின் காதல் தோல்வி காரணத்தால் சாபமும் பெற்றவர்
ஆதியில் இருந்து அந்தம் வரை மஹாபாரத கதையில் வாழ்ந்தவர்
கடமை உணர்ச்சியில் எடுத்துக் காட்டாக திகழ்ந்தவர்
கண்ண பரமாத்மாவால் மகான் என்று போற்றப்பட்டவர்
பாசப் பேரனான அர்ஜுனனால் அம்பு படுக்கையில் வீழ்ந்தவர்
பகவானை முன் நிறுத்தி அவன் துதி பாடியவர்
இறக்கும் தருவாயிலும் தருமனுக்கு உபதேசித்தவர்
அம்பு படுக்கையில் படுத்தும் கண்ணன் கருணையால் வலி தெரியாதவர்
உத்தராயணத்திற்காக காத்திருந்து இறுதி மூச்சை விட்ட உத்தம புருஷர்

துரோணர்


குச்சிகளை மந்திரத்தின் உதவிக் கொண்டு அடுக்கி பந்தை கிணற்றிலிருந்து எடுத்து பீஷ்மரை அசத்தியவர்
பீஷ்மரால் குரு வம்சத்தின் ஆசானாக நியமிக்கப்பட்டவர்
அஸ்வத்தாமன் என்ற அசகாய சூரனை ஈன்றெடுத்தவர்
திருதிராட்டினன் பாண்டு புத்திரர்களுக்கு குருவாய் பேதமின்றி கற்பித்தவர்
அர்ச்சுனன் பாலும் அவன் திறமையின் மேலும் தனி அன்பை வைத்திருந்தவர்
ஏகலைவன் என்ற இவரது சீடனின் கட்டைவிரலை குருதட்சணையாக கேட்டவர்
என்றும் தன் கடமையையே செய்து வந்த பிராமணர் இவர்
கண்ணனின் சூழ்ச்சியால் அனைத்தையும் விட்டுவிட்டு போர்க்களத்திலேயே உயிரை விட்டவர்


திருதிராட்டினன்

கண்ணின்றி அரசாண்டாலும் அகக்கண்ணையும் தொலைத்தவர்
வார்த்தையில் இனிமையும் மனதில் வன்மமும் பாண்டவர்களுக்காக வைத்திருந்தவர்
காந்தாரி என்ற உத்தமியை மனைவியாக கொண்டவர்
துரியோதனன் துச்சாதனன் என்று நூறு குழந்தைகளின் தந்தையிவர்
பிள்ளை பாசத்தால் பாஞ்சாலியின் மானபங்க நேரத்திலும் மௌனம் சாதித்தவர்
போர் அறிவிப்பின் போதிலும் பிள்ளை சொல் கேட்டு அதர்மத்தை சார்ந்து நின்றவர்
இத்தனை இருந்தும் ஞானக்கண் கொண்டு போரைக் காண வியாசரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்
அதை ஏற்க மனமின்றி சஞ்சயனுக்கு அகக்கண் கொடுக்க செய்து பாரத போரைப் பற்றி தெரிந்து கொண்டவர்
போரிலே அனைவரையும் இழந்து முடிவில் காட்டில் தவம் செய்து உயிரை விட்டவர்.

கண்ணன்

ரோஹிணி நட்சத்திரத்திலே பிறந்த அவதாரமவன்
கருநீல நிறத்தை பூண்டு சிறையில் பிறந்தவன்
தேவகி வசுதேவரை பெற்றோராய் ஏற்றவன்
இருப்பினும் வேறு தாய் தந்தையரை தேடி ஓடியவன்
பிருந்தாவனத்தில் கெஞ்சி கொஞ்சும் செல்லம் அவன்
யசோதையை அன்பினால் ஆட்டிப் படைத்தவன்
கோபியர்களை மயக்கி தன்வசம் இழக்கவைத்த அழகன்
ராதையின் காதலில் நனைந்து அடிபணிந்தவன்
தன் அட்டூழிய மாமன் கம்சனை கொன்று மதுராவை மீட்டவன்
சந்தீபனியை ஆசானாக ஏற்று அறுபத்து நான்கு கலைகளையும் கற்றவன்
துவாரகையை அழகாக நிர்மாணித்தவன்
ருக்மிணியை கடத்தி சென்று திருமணம் செய்தவன்
பதினாராயிரத்து எட்டு மனைவிகளை திறம்பட காத்தவன்
மகாபாரத போரின் மிக முக்கிய நாயகன்
அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்த ஆசானவன்
தன் யாதவக் குலத்தை அவர்களின் செருக்கை கொண்டே அழித்தவன்
தன் நண்பனும் சகோதரருமான உத்தவனுக்கு உயிர்விடும் தருணத்தில் ஆத்ம ஞானத்தை உரைத்தவன்
இறுதியில் வேடனொருவனின் அம்பினாலே உடலோடு ஆத்ம ஜோதியிலே கலந்தவன்

அவன் வாழ்வில் சுகம் என்று எதுவும் கண்டவனில்லை
அவனைப் போல் சோதனைகள் சந்தித்தவரில்லை
வாழ்வின் இரகசியத்தை அவனை விட யாரும் கற்பிக்கவில்லை
புன்னகையை மட்டும் என்றும் அவன் விட்டவனில்லை
அவன் புன்னகையில் மயங்கிய காதலிகளும் அவனுடன் சேர்ந்து இருந்ததில்லை
இருப்பினும் அவனை என்றும் அவர்கள் கைவிட்டதில்லை

கண்ணா! கேட்கிறாயோ என் குரலையும்
ஆட்கொண்டு அருள்புரிவாயோ அனைவரையும்

-- அன்பே சிவம் - பத்மஜா
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=17359&st=0&sk=t&sd=a&hilit=%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BE&start=30

No comments: