Friday, February 15, 2008

கீதை - பத்மஜா - மூன்று

For it is in giving that we receive; it is in pardoning that we are pardoned; and it is in dying that we are born to eternal life.


- St. Francis of Assissi

.......

மரண வாக்குமூலம் – என்னை சிந்திக்க வைக்கும் ஒரு விஷயம்.

மரண வாக்குமூலத்திற்கு ஏன் இத்தனை மதிப்பு? மரணத் தருவாயில் ஒருவர் எத்தனைக் கொடுமைக்காரராக இருந்தாலும் உண்மையே பேசுவார் என்று எந்த ஆதாரம் கொண்டு நம்பப்படுகின்றன?

ஞானிகள், புரட்சியாளர்கள் போன்று உலகில் ஒரு சிலர் மட்டுமே மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் சாமானியர்களுக்கு மரணம் என்பது பயம் தரக்கூடிய ஒன்றாகவே உள்ளது. உதாரணத்திற்கு ஒரு துப்பாக்கியை என் நெற்றிப் பொட்டில் வைத்தால் என்னுள் பயம் வேகமாக வந்து உறவாடும் என்பது உறுதி. அது ஏன்?

புத்தகத்தில் படித்ததைப் போல நரகத்திற்கு போவோம் துன்பத்தை அனுபவிப்போம் என்ற பயமா? இல்லை நம் மரணத்தால் பல அன்புள்ளங்களை நிரந்தரமாக விட்டு பிரிந்துவிடுவோமே என்ற வருத்தமா? இல்லை தற்பொழுது அனுபவிக்கும் சுகத்தை விட்டுவிட்டு வேறு உலகில் என்ன மாதிரி கஷ்டபடப் போகிறோமோ என்ற சோகமா? இல்லை இந்து நம்பிக்கைப்படி மறுபிறவியில் என்ன மாதிரி சூழ்நிலையில் மறுபடியும் பிறப்பேனோ என்ற அச்சமா? இல்லை உடலோடு உணர்வுகளோடு ஐம்புலன்களோடு வாழ்ந்த வாழ்க்கை ஒன்றுமின்றி காற்றில் கரைந்து விடுமே என்ற துயரமா? இல்லை வேறு பல காரணங்களா?

அடிப்படையில் இந்த பயத்திற்கு முக்கியக் காரணம் வாழ்ந்த வாழ்க்கைதானோ?

‘Paga kunguru baandh Meera naachire….’ - மீராவின் இந்த பஜன் அவளின் சோதனை நிறைந்த வாழ்க்கையை விளக்கினாலும் என்றும் ஆனந்த கூத்தாடிய பெண்மணி அவள். அவளை விஷம் கொடுத்து கொல்ல நினைத்த போதும் சிரித்துக் கொண்டே குடித்துகண்ணன் மேல் இருந்த உயர்ந்த காதலாலே உயிர் பிழைத்த விந்தையை இந்த பாடலின் மூலம் உலகுக்கு உணர்த்தியவள். அவள் பாடலை உருகி ரசித்தாலும் அவளை போல் எப்பொழுதும் ஆனந்தத்தில் இருக்க முடிவதில்லை.

ஏன்?

வாழ்க்கையை அலசும் போது மகிழ்ச்சியில் குழந்தையின் வெகுளித்தனத்துடன் ஓடி வானத்தை தொட நினைத்த கணங்களும் தெரிந்தது. அப்படியே அந்த சந்தோஷத்தில்; அதே துள்ளிக் குதிக்கும் மனதுடன் இறைவனிடம் நன்றி சொன்ன கணங்களும் தெரிந்தது. அந்த இனிமையான பொழுதிலேயே அவன் காலடியிலேயே உயிரை விட துடித்த கணங்களும் தெரிந்தது. துயரத்தில் வேதனையில் கண்ணீர் சிந்திய கணங்களும் தெளிவாக தெரிந்தது.

பிறப்பும் இறப்பும் ஒவ்வொருவருக்கும் தனிதனியே நிகழும் போது இந்த இடைபட்ட காலகட்டமான வாழ்க்கையில் மற்ற பல உயிர்களின் ஆதிக்கம் தான் எத்தனை! ஆச்சரியம்தான். சிரிப்பதை தவிர வேறென்ன செய்வது! மாயை என்று ஏதோ சொல்கிறார்களே அது இதுதானோ?

வாழ்க்கை பொய்மை கலந்ததா அல்லது உண்மையா? மகிழ்ச்சி துக்கம் என்ற இரு நூலைக் கொண்டு நம் வாழ்வும் பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மை போல் ஆடுவதன் காரணம்தான் என்ன?

ஜனனம்-மரணம்; வாழ்வின் சுக-துக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள், வாழும் விதிமுறைகள், தவறு-பாவம் வித்தியாசங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் உறவுகளின் வினோத தாக்கங்கள், எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கும் நோக்கங்கள், மனதின் சஞ்சலங்கள், ‘வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ, இனி இப்படி இருக்க கூடாது’ என்று வெதும்பி தவிக்கும் ஒரு சில பிரசவ கால ஞானங்கள் - இதையெல்லாம் நினைத்த போது ஆச்சரியமாகவே இருந்தது.

இந்த வாழ்க்கை மேடையில் துக்க நேரத்திலும் சிரித்து கொண்டே எப்படி இருப்பது? எனக்கு தெரியவில்லை. துக்கத்தை அன்புடன் அழைத்து குளிர்பானம் கொடுத்து விருந்தோம்பல் செய்யும் நிதானம் எனக்கு இருந்தால் கீதையை படித்துப் புரிந்து வாழ்க்கையில் பயில இந்த கடின முயற்சி எடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

அதனால் நான் கண்ணனிடம் கேட்டேன் -

மனதில் உறுதியின்றி தொய்ந்து போகிறேனா
அடுத்து என்ன என்று புரியாமல் குழம்புகிறேனா
மகிழ்ச்சியிலே என்னை மறந்து துள்ளி குதிக்கிறேனா
வேதனையில் வெந்து நொந்து தனியே தவிக்கிறேனா

வாழ்வை புரிந்து கொள்ளாமல் நான் வாழ்கிறேனா
சுக-துக்கத்தின் அலைகளால் தடுமாறி போகிறேனா
எது நிச்சயம் என்று அறியாமல் தடுமாறுகிறேனா
யார் நித்தியம் என்று உணராமல் ஏங்குகிறேனா

இறப்பின் இழப்பில் என்னை தேட முயல்கிறேனா
இறைவனிடம் தினமும் இதற்கு நியாயம் கேட்கிறேனா
உயிர் இருந்தும் துக்கத்தால் இறந்தவரை கண்டு கலங்குகிறேனா
உடலின் நிலையற்ற தன்மையை கேட்டும் நன்றே விழிக்கிறேனா

என்னை தேற்றவே உன் கையை எதிர்பார்க்கிறேனா
ஆதரவாய் அணைக்கவே உன்னை வேண்டுகிறேனா
என் குருவே என்று உன்னையே சார்ந்து நிற்கிறேனா
உன் அன்பான பார்வைக்காகவே ஏங்கித் தவிக்கிறேனா

முட்டாளை பார்த்தும் சிரிக்காமல் இருக்கும் நந்தகுமாரனே
என்னை உதறித் தவிர்க்காமல் ஏற்று கொண்ட ஆசானே
அன்பினால் என்னை வென்று விட்ட என் கண்ணனே
எனக்கு புரியும்படி பதில் சொல்வாய் என் தோழனே

கண்ணன் சொன்னான் -

உயர்ந்த பாரத குடிமகனே!
எதையும் கண்டு கலங்கி நீ அழ தேவையில்லை
உலகில் உள்ள எவரும் என்றும் நிரந்தரம் இல்லை
நீ உண்மை என்று நினைப்பது எதுவும் உண்மையில்லை
இதை உணர்ந்த ஞானியர்க்கு கவலை ஏதுமில்லை

எங்கும் நிறைந்த அது அழிவை காண்பதில்லை
உடலுக்கு அழிவுண்டு ஆன்மாவுக்கு அழிவு என்றும் இல்லை
யாரும் யாரையும் கொல்வதும் இல்லை கொல்லப்படுவதும் இல்லை
எதையும் தான் செய்வதாக நினைப்பவன் உண்மையை உணர்வதில்லை

உயிருக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை
இந்த சுழற்சியில் எங்கும் யாரும் மறைந்து போவதும் இல்லை
நித்தியத்தை அறிந்தவன் யாரையும் கொல்வது சாத்தியமில்லை
தான் கொல்லப்படுவதாக வருந்தி ஓடி ஒளிந்து கொள்வதில் பயனில்லை

நண்பனே! கிழிந்த துணிகளை களைந்து புதியதை உடுத்துவதை போல
நைந்து போன உடலை விட்டு உயிர் வேறு புதிய உடலில் நுழைகிறது
பழைய துணிகளை களையும் வேளையிலே புதியதை மனம் வரவேற்கிறது
புதிய உடலை நோக்கி உயிர் செல்லும் போது மட்டும் ஏன் வருந்துகிறது

மேலும் கேள்! அது அனைத்திற்கும் அப்பாற்பட்டது
ஆயுதங்களால் கிழியாது நெருப்பினால் எரியாது
நீரினால் நனையாது காற்றினால் உலராது
எங்கும் நிறைந்துள்ள அதைப் பற்றி நினைக்கவும் இயலாது

இந்த ஞானத்தை உன் சிந்தையில் எப்பொழுதும் தக்க வைத்து கொள்
பிறப்பும் இறப்பும் நித்தியம் என்று நினைத்தாலும் வருந்த தேவையில்லை
ஏனெனில் பிறப்பு என்றால் இறப்பு நிச்சயம் என்பதில் இரு வேறு கருத்துமில்லை
அதைப் போல இறப்பு என்றால் பிறப்பும் உண்டு என்ற ஞானியர் கூற்று பொய்யில்லை

உன் கையை மீறின இந்த சுழற்சியை நினைத்து ஏன் வருந்த வேண்டும்?
கனவில் வரும் குழந்தையின் நோயை கண்டு தான் ஏன் அழ வேண்டும்?
ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று இடையில் மட்டும் இருப்பதாக ஏன் கற்பனை செய்ய வேண்டும்?
சிந்தித்து பார்! இழப்பை நினைத்து ஏன் மனம் வேதனையடைய வேண்டும்?

ஒருவர் ஆத்ம ஞானத்தை ஆச்சரியமாக பார்க்கிறார்
மற்றொருவர் ஆச்சரியத்துடன் அதைப்பற்றி பேசுகிறார்
வேறு ஒருவரோ மிகுந்த ஆச்சரித்துடனே இதைப் பற்றி கேட்கிறார்
உண்மை உணராததால் எவரும் புரியாமலே விழிக்கிறார்

உடலில் குடிகொண்டிருக்கும் ஆன்மா என்றுமே நிலையானது
உண்மையை அறிந்ததால் எதற்காகவும் வருந்தாமல் இருப்பதே நல்லது
மேலும் உன் கடமையில் இருந்து வழுவாமல் போரிடுவதே சிறந்தது
இதை விட மேலான கடமை ஒரு வீரனுக்கு தான் ஏது?

வீரனுக்கு என்றென்றும் அழகு போர் புரிவதே
அதில் பங்கு கொண்டு பெருமையடைவதும் அவன் இயல்பே
சொர்க்கத்தின் கதவை திறக்கும் திறவுகோல் இதுவே
என்று நன்கு புரிந்து போர் புரிவாய் என் தோழனே

சிம்மத்தை போல கர்ஜித்து உயிரை துச்சமாக நினைத்தவன் அல்லவோ
அதர்மத்திற்கு எதிராக போர் புரியவே துடித்தவன் அல்லவோ
நீயே பின் வாங்கினால் பாவத்திற்கு ஆளாவது உறுதி அல்லவோ
உன் புகழும் அழிந்து இழி நிலை அடைவதை தடுப்பது யாருமல்லவோ

போரில் மடிவது சாமானியர்க்கு கிடைக்கும் வரமா என்ன
புறமுதுகிட்டு ஓடும் வீரன் உயிர் வாழ்வதில் அர்த்தம் தான் என்ன
மக்களும் உன் இழிநிலையை நினைவு கூர்ந்து பார்ப்பதில் சந்தேகமென்ன
மேலும் சொல்கிறேன்நான் சொல்வதை போல் நடப்பாயா என்ன

ஆற்றல் குறைந்து பயத்தினால் போர்க்களத்திலிருந்து ஓடியதாக பேசப்படுவாய்
உன் புகழ் அழிந்து அனைவராலும் கேவலமாக பார்க்கப்படுவாய்
உன் மதிப்பும் மரியாதையும் மறைந்து இழிநிலைக்கு தள்ளப்படுவாய்
பகைவர்களாலும் சகிக்க முடியாத மொழிகளால் பேசப்பட்டு கேவலப்படுவாய்


வீரனுக்கு இதை விட வேதனை தருவது வேறு எதுவும் இருக்க முடியாது
உயிரை விட மானம் பெரிது என்பது உனக்கு தெரியாமல் இருக்காது
இறந்தால் சொர்க்கம்இருந்தால் வெற்றி என்ற உண்மை பொய்யாகாது
சிலிர்த்தெழுந்து போர் செய்வாய்உன் மனக்கிளர்ச்சி இங்கு செல்லாது

வாழ்வின் ரகசியத்தை உனக்கு சொல்கிறேன் என் அருமை நண்பனே
இன்பம்-துன்பம்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி இவை யாவும் வருவது சகஜமே
போரை போருக்காக வேண்டி செய்யும் போது பாவத்திற்கு இங்கு இடமே இல்லையே
இவை யாவற்றையும் சமநோக்கில் மட்டும் பார்த்து போர் புரிவாயே

நான் இது வரை சொன்னது யாவும் ஞானத்தை சார்ந்த பாடம் ஆகும்
இனி யோக முறையைப் பற்றி விளக்கப் போகிறேன் உன் சித்தமும் சிறிது தெளியும்
செயல் புரிவதன் தாத்பர்யத்தை அறிந்து உன் கலக்கமும் கலையும்
என் உன்னத சீடனாக மாறி உன் மனக்கிளர்ச்சியும் மறையும்



எழுதி விட்டு நிமிர்ந்த போது எப்பொழுதோ படித்த இந்த வாக்கியம் என் நினைவுக்கு வந்தது.

“Pain is inevitable but suffering is optional”

இறப்பைப் பற்றி அலசும் போது என் நினைவுக்கு வருவது இந்த epitaph - ஒரு தந்தை தன் இறந்த மகனுக்காக கல்வெட்டில் பதித்துள்ள இந்த வாக்கியம் என்னை கரைத்தது.

"He went too far in the search of flowers."

துக்க நேரங்களிலும் சிலர் உணர்வுகளை எத்தனை அழகாகவே வெளிப்படுத்துகின்றனர்! ஆச்சரியமே!

போகப் போக கீதையின் சாரம் எனக்கும் சிறிது புரியுமோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments: